
கண்ணில் ஓர் காவியம்
- ஏ. சித்ரா, கோயமபுத்தூர்
- A. Chitra, Coimbatore
இன்றைய நூல் மதிப்புரைக்கு நாம் எடுத்துக் கொண்டுள்ள நூல் – கண்ணில் ஓர் காவியம் என்ற நூலாகும். எழுதியவர்- டாக்டர்- திரு ஏ.பி. சாமி. உதவி ஆசிரியர்கள் டாக்டர் ஏ.பி.செவ்வேள், மற்றும் டாக்டர் திருமதி சிவமலர் மெய்யப்பன் ஆகியோர் எழுத்தாளரின் புதல்வர் மற்றும் புதல்வியாவார்.
“புவியில் பெரிசு புத்தகப் பரிசு“ எழுத்தாளர் அவர்கள் தம் அன்புக் கோரிக்கையாக பெரும் தொழிலதிபர்கள் இந்நூலை போனஸுடன் கூடவே பரிசாக அளிக்குமாறு வேண்டிக் கொள்கிறார்.
இந்நூலை அவர்கள் ஊனமுற்றோரை உயர்த்த உதவும் கருணை உள்ளங்களுக்கும், ஊனத்தை குறையாக எண்ணிக் கலங்காமல் உயரும் முயற்சியாளருக்கும், தமிழுக்கும், தாய் தந்தைக்கும், நங்கை உமையம்மைக்கும், மருதமலை மாமணிக்கும் காணிக்கையாக்கியுள்ளார்.
அறிந்து கொள்ளத் தெரிந்தால் அறிவு. ஆராய்ந்து படிப்பவரே அறிஞர்.
பார்வையிழந்து ஊனமாகி உருத் தெரியாமல் உருக்குலைந்து போன ஒரு பெண் சுமார் 730 கதாபாத்திரங்களோடு நெருக்கமாக வாழ்ந்த உருக்கமான உண்மைச் சம்பவங்களை சேகரித்து மிகச் சுருக்கமாக வடித்த உயர் காவியம் தான் இந்தக் கண்ணில் ஓர் காவியம்.
திடீரென மின்சாரம் தட்டுப் பட்டால் கண நேரக் காரிருளில் தடுமாறும் நாம் ஒரு மணி நேரம் கண்ணைக் கட்டிக் கொண்டு இயல்பான அன்றாடப் பணிகளை செய்ய முயற்சிக்கும் போது தான் கண் பார்வை அற்றவரின் துன்பங்களை அரை நொடியாவது அறிய முடியும்.
வாழ்க்கைச் சுனாமிக் கடலில் தவித்துக் கொண்டிருந்த மீனா என்னும் கதைத் தலைவியை அக்கறையோடு ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு யுகமாய்க் கருதி இதயத்தில் கவனமாய்ச் சுமந்து கரை சேர்க்க ஆசிரியர் அரும் பாடு பட்டிருக்கிறார்.
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் எனப் பார்வை இல்லாத இப் பாவை மூலம் உலகை உயர்த்தும் உத்வேக உந்து சக்தி மிக்க இனிய இலக்கியம் ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.
உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர்களில் ஒருவரான லியோ டால்ஸ்டாய் அவர்கள் தனது “போரும் அமைதியும்” என்ற நாவலில் ஏறக்குறைய 600 கதா பாத்திரங்களின் பின்னலோடு எடுத்துக் காட்டியுள்ளார். நம் ஆசிரியர் அவர்கள் சுமார் 750 கதா பாத்திரங்களை வைத்து கதை அமைத்துள்ளார்.
ஓ.ஹென்றி அவர்களின் கதைகளில் வருவது போல யாவரும் எதிர் பாராத ப்ரம்மாண்டமான முடிவுகளை உள்ளடக்கிய பல பகுதிகள் இந்த நாவலில் உள்ளன என்று டாக்டர் என்.சிவக்குமார் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
பட்டிமன்றப் பேச்சாளர் திரு எஸ். ராஜா அவர்கள் தனது வாழ்த்துரையில்
“இது புதிய சமுதாயத்தை உருவாக்கும் பல பட்டி மன்றங்களுக்கு பாதை வகுக்கும் விளை நிலமாய் விளங்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. என்று குறிப்பிட்டுள்ளார்.
எழுத்தாளர் கோவை ஞானி திரு கி.பழனிசாமி அவர்கள் தனது வாழ்த்துரையில் இந்நூலின் கதாபாத்திரத்தின் சாதனைகள் அற்புதங்கள் என்று சொல்லும் அளவில் உள்ளன. இவை நடப்பியலுக்கு இது வரை பொருந்தி வரவில்லை எனவே, இந்நூலை பெருங்கதை என்று குறிப்பிட விரும்புகிறார்.
புலவர் திரு சி.இராசியண்ணன் தனது வாழ்த்துரையில்
கண்ணிலோர் காவியம்என்கிற நாவலைப்
பண்ணமுதம் போல் வடித்த பாங்கதனை- வண்ணமுற
உச்சிமேல் வைத்ததனை ஊழிதோறும் போற்றிடுவர்
நச்சிடுவர் நாள்தோறும் கற்று ,என ஒரு நேரிசை வெண்பாவாக வாழ்த்தியுள்ளார்.
பத்து ஆசிரியர் ஓர் குருவுக்குச் சமம், நூறு குருக்கள் ஒரு தந்தைக்குச் சமம் என்று மனு தர்மத்தில் சொல்லப்பட்டது போல் எங்கள் வாழ்வில் தாயாய், தந்தையாய், அன்பான ஆசானாய், கல்வி தந்து இக்காவியம் மூலம் புகழ் தந்து இந்த உலகுக்கு எங்களை அடையாளம் காட்டிய எம் தந்தையின் இச் சமுதாய இலக்கியப் பணி அனைவரையும் சென்றடைய வேண்டும் என டாக்டர் திரு.ஏ.பி.செவ்வேள் மற்றும் டாக்டர் திருமதி சிவமலர் மெய்யப்பன் ஆகியோர் தம் அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளனர்.
நமது ஆசிரியர் 25 ஆண்டுகளாக அல்லும் பகலும் இடைவிடாது பல இன்னல்களுக்கிடையே காலை 3 மணி முதல் 9 மணி வரை எழுத்துப் பணியாற்றி மாலையில் கோர்க்கப் பட்ட பல வண்ண மலர்களைப் போல் கதைகளைக் கோர்த்து அழகுற அமைத்துள்ளார்.
ஒவ்வொரு சிறு கதைக்கும் பொருத்தமான தலைப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
இனி நாம் காவியத்தின் உள்ளே ப்ரவேசிக்கின்றோம்.
இக்கதைக் களம் கோவை சூலூர் அருகிலுள்ள ராசி பாளையம் என்னும் அழகிய கிராமமாகும் .
காவியத்தின் நாயகி மீனாவின் கல்யாணமான புதிதில் கணவர் திரு.சதீஷ் அவர்கள் எப்போதும் மீனாவின் கண்களையே புகழ்ந்து பேசுவதை நோக்கும் போது அதில் ஏதோ ஒரு இடையூறு மறைந்திருப்பதை காண்கிறோம்.
மத நல்லிணக்கம், தேசிய ஒருமைப் பாடு போன்றவை கதையில் இழையோடுகிறது.
கதாநாயகி மீனா பன்மொழி வித்தகி. கலைகளெல்லாம் ஒருங்கிணைந்து ஓர் உருக் கொண்டாற்போன்ற தன்மை படைத்தவர். மற்றவருக்குத் தமிழ் கற்றுத் தந்து அவர் பல மொழி பயின்று வைத்திருந்தார்.
வேலைக்குப் போகும் பெண்கள் தங்க முட்டையிடும் வாத்துக்களாக உள்ளது சுட்டிக் காட்டப் பட்டுள்ளது. கட்டிய கணவனே மனைவியைச் சந்தேகப் படுவது, ஓடிக் கொண்டிருக்கும் இதயமே உயிரைச் சந்தேகப் பட்டால் உயிருக்கு உறவேது ? கருணையும் அன்பும் இருந்தால் கணவனும் மனைவியும் கடுகு மேல கூடச் சநேதோஷமா வாழ்வாங்க என்ற வரிகள் இல்வாழ்விலுள்ள அனைவருக்கும் பொருந்தும்.
மாமியார் நாகம்மாவிடம் உயிர் தப்பி தன் மகள் நெப்போலினியோடு கிராமத்துக்கு வந்த மீனா கண்பார்வை பறிபோன நிலையிலும் பிச்சை எடுக்காமலும் , தற்கொலை செய்து கொள்ளாமலும் உயிர் வாழ்ந்தே தீருவேன் என்ற மன உறுதியோடு வாழ்கிறாள். வாழ்க்கை என்பது முழுக்க நிலவும் அல்ல . பூரிப்பில் பூத்துக் குலுங்கும் பூஞ்சோலையும் அல்ல. போராட்டமே வாழ்க்கை. வாழ்க்கையே போராட்டம். சிந்திக்க வேண்டிய வரிகள்.
இரு வயிறுகளையும் வளர்க்கப் பத்துப் பாத்திரம் தேய்த்தும் கோலப் பொடி இடித்தும் தலைச்சுமையாய் ஊர் ஊராய் அலைந்து விற்று உயிர் வாழ்ந்து வருகிறாள்.
விவேக சிந்தாமணியின் வரிகளான...
ஆ ஈன, மழை பொழிய, இல்லம் வீழ, அகத்தடியாள் மெய் நோக, என்கின்ற தனிப் பாடல் வரிகள் நம் கதாநாயகிக்கு மிகவும் பொருத்தம்.
வறுமைத் தீ வாட்டுகிறது. ஜீவ மரணப் போராட்டம் , வயிற்றுக் கஞ்சிக்கே வழியில்லாத நிலைமை. கடும் காய்ச்சல் முற்றி பேச்சு மூச்சில்லாமல் கிடக்கிறாள். இனிப் பிழைக்க மாட்டாள் என்ற நிலைமைக்கு வந்து விட்டாள் மீனா . அப்படிக் கிடந்த மீனா எப்படி மரணத்தின் பிடியிலிருந்து தப்பி உழைப்பால் படிப் படியாய் உயருகிறாள் என்பது தான் கதையின் சாராம்சம்.
ஆசிரியர் மீனாவின் வாயிலாக உயர்ந்த சமுதாயவியல் கோட்பாடுகளையும் , சிந்தனைகளையும் நம் முன்னே விவரிக்கின்றார். கண் இரண்டும் இல்லாத நிலையிலும் படைத்த இறைவனை நொந்து கொண்டு அழுது புலம்பி வாழ்க்கையை வீணே கழிக்காமல் தான் ரத்த தானம் செய்து கிடைத்த பணத்தில் விதவைத் திருமணமும் கலப்புத் திருமணமும் செய்து வைக்கிறாள்.
கண் பாரவையில்லாத அரிஜனச் சிறுவனுக்கு கண் தானம் பெறச் செய்து ஆலயத்தில் அர்ச்சகர் ஆகச் செய்த பகுத்தறிவுச் சாதனைகள்.
இந்த நாவலில் உண்ணாவிரதம் , மௌன விரதம் என்பது போல பார்க்காவிரதம் என்ற ஒரு புதிய விரத்தின் மூலம் கண் தானத்தின் மகிமையை உணர்த்தி மண்ணில் புதைக்கப் படும் கண்கள் மனித முகங்களில் விதைக்கப் பட வேண்டும் என கண் தானத்தின் அவசியம் பெரிதாக உரைக்கப் பட்டுள்ளது.
மீனா பார்வையற்றவர்கள் ப.லும் ப்ரெய்லி முறையில் கல்வி கற்று ஏற்கெனவே ஆசிரியையாகப் பணி புரிந்த அனுபவத்தோடு கல்வித் துறையில் மேலும் புதிய சாதனைகளாக தமிழ், ஆங்கிலம் இலக்கியம், பொருளாதாரம், சமஸ்க்ருதம் ஆகிய மொழிகளிலும் டாக்டரேட் பட்டங்களைப் பெறுகிறாள்.
நினைவாற்றலை வளர்த்துக் கொண்டு பல்கலைக் கழகத்தில் தசாவதான நிகழ்ச்சியின் மூலம் எல்லோரையும் அசர வைக்கிறாள்.
குடித்தவன் மூளைக்கும் உதவ மாட்டான் , ஒரு வேலைக்கும் உதவ மாட்டான் . நான் இனிமேல் குடிக்காமல் குடும்பத்தை ஒழுங்காக கவனிப்பேன் என மதுவிலக்குப் பற்றியும் குறிப்பு உள்ளது.
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண முயலும் நம் தமிழக முதல்வரின் ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசித் திட்டம் குறித்து அறியும் போது மண்டினி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்ற பாடல் வரிகள் நம் நினைவுக்கு வருகிறது.
ஆசிரியர் மீனா வாயிலாக அறிவியல் சமூக பொருளாதார சிந்தனைகளைத் தூண்டி விடுகிறார். தன் கற்பனை கதா பாத்திரமான மீனாவுக்கு எண்ணிலடங்காத பட்டங்களும் , பரிசுகளும், விருதுகளும், ஊக்கத் தொகைகளும் பெற வைத்து அவர் புகழை விண்ணளவுக்கு உயர்த்துகிறார். ஏனெனில் கண் இருந்தும் குருடராய் , காதிருந்தும் செவிடராய், வாழ்நாளை வீழ் நாளாக்கும் எத்தனையோ கோடானுகோடி மக்களில் மீனாவைத் தனித்துக் காட்டி அவரைப் பார்த்துக் கற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லாமல் சொல்கிறார்.
இயலாமை இல்லை.
முயலாமை என்பதே உண்மை.
முடியாது என்கிற வார்த்தை என் அகராதியிலேயே இல்லை என்று மீனாவின் மகள் நெப்போலினியின் வார்த்தைகள் உலகையே உலுக்கி விட்டது.
கொத்தடிமைகளை மீட்க உதவிய மீனாவுக்கு அரசு குடியரசு தினத்தன்று அண்ணா விருது வழங்கிக் கௌரவித்த்து.
அது மட்டுமல்ல. இமயமலை உச்சியில் ஏறி நம் தேசியக் கொடியைப் பரக்க விட வேண்டும் என்ற தணியாத ஆவலில் மகளிர் குழுவுடன் சென்று தேசியக் கொடியை நட்டு எத்தனையோ இன்னல்களுக்கிடையேயும் எடுத்த காரியம் யாவினும் வெற்றி பெறும் திறன் உண்மையிலேயே அதிசயம்.
பெண்மை இமயம் போல் உயர வேண்டும் .தாய்மை உயர்வு பெற வேண்டும். தாயினும் மகள் உயர்வு பெற வேண்டும். இதைத் தாயும் மகளும் தலையைய கடமையாக கொள்ள வேண்டும்.
எவ்வளவு துன்பம் வந்தாலும் பெண்கள் கண்ணீர் விடக் கூடாது. எதிர் காலப் பெண் குழந்தைகள் கோழைக் கண்ணீர் சுரப்பிரகள் இல்லாமல் தான் பிறக்க வேண்டும். ஆசிரியரின் தீர்க்கமான பெண்ணியச் சிந்தனைகள் நம்மை வியக்க வைக்கிறது.
எதை இழந்தாலும் உற்சாகத்தை மட்டும் இழந்து விடாதே . எல்லாம் இழந்த நிலையிலும் உற்சாகம் ஒன்று மட்டும் இருந்தால் மீண்டும் முன்னேறி விடலாம். நமது சாதனைகளுக்கு சாக்ரடீசின் பேரார்வம் தேவை. நம் விதி நம் கைகளில் தான் இருக்கிறது போன்ற கருத்துக்கள் எல்லாக் காலத்தினருக்கும் பொருந்தும்.
மனித மூளையில் 3000 கோடி சிற்றறைகள் உள்ளன. அவற்றில் ஏதாவது ஒரு மூலையிலாவது ஒரு அணுவிலாவது என்னால் முடியாது என்கிற எண்ணம் தோன்றியது கிடையாது என்று முயற்சியூடைமை பற்றி விளக்குகிறார்.
மீனா தன் சாதனைகள் மூலமாக ஜப்பான் சென்ற போது ஜப்பான் மன்னர் அந்நாட்டிலேயே தங்கி விடச் சொன்ன போது தாய்நாட்டுப் பற்று மற்றும் சேவை உணர்வு காரணமாக கண்ணியமாக மறுத்து விடுதலும் ,ஜப்பானில் வீடு தோறும் ஒரு தமிழ்ப் பெண்ணின் புகைப்படம் வைத்துப் போற்றப்படும் நிலைக்கு உயர்ந்தது.
மீனா அகில உலகப் பயணங்கள் மூலம் உலகளாவிய பெருந்தலைவர்களுடன் பெரிய திட்டங்கள் தீட்டுவதும் , ஐ.நா. சபையின் மிக உயர்ந்த பதவியும், உலகத் தலைமகள் என்ற பட்டம் பெற்றதாக காட்டியுள்ளார்.
நெப்போலியன் நாட் கணக்கில் தூங்க மாட்டாராம். அமர்ந்த படியே 3 நிமிடங்கள் தூங்கிப் புத்துணர்வு கொள்வாராம். அது போல நம் காவியத் தலைவியும் நமக்குப் பணி, நாட்டுக்குழைத்தல், இமைப் பொழுதும் சோராதிருத்தல் என்ற கொள்கையுடையவர். முன்னேறத் துடிக்கும் ஒவ்வொரு மாணவனும், மாணவியும் இக் கருத்தை மனதிலிருத்த வேண்டும்.
இந்நாவலில் என்னை மிகவும் கவர்ந்த வரிகள் பின் வருமாறு-
அறத்தில் நம்பிக்கை, அறிவில் தெளிவு, ஆராய்ச்சியில் – நடுநிலைமை, ஆக்கத்தில் – ஊக்கம், இயற்கையில்- ஈடுபாடு, ஈகையில்- உலக வள்ளல், உழைப்பில்- ஓய்வின்மை, உண்மையில்- உயிர்ப்பு, லட்சியத்தில்- உறுதி, புலமையில்- நுண்மாண் நுழைபுலம், புரட்சில்- முதன்மை, புகழில்- மயஙஅகா நிலை,. பண்பில் – சால்பு,துயரில்- துவளாமை, பன்மொழியில்- புலமை, தமிழில்-தமிழ் நெஞ்சம், வறுமையில்- செம்மை, கருணையில் – வள்ளலார், அகிம்சையில்- காந்தி., கொடையில்-கர்ணன் என நெஞ்சுக்கு நீதி நிறைந்த சுடர் மணிப் பூணாக ஆசிரியர் மீனா என்கின்ற கதா பாத்திரத்தை நம் மனக் கண் முன்னே நடமாடும் தெய்வமாக உருவகப் படுத்தியுள்ளார்.
நாம் ஒவ்வொருவரும் தவறாமல் மூன்று கனவு காண வேண்டும்.
நாம் முன்னேற வேண்டும் என்பது முதல் கனவு.
நம் வீடு முன்னேற வேண்டும் என்பது இரண்டாவது கனவு
நம் நாடு முன்னேற வேண்டும் என்பது மூன்றாவது கனவு.
நம் முன்னாள் குடியரசுத் தலைவர் மாண்புமிகு டாக்டர் எ.பீ.ஜே அப்துல் கலாம் அவர்களை ஆசிரியர் இந்த இடத்தில் நினைவு படுத்துகிறார்.
ஆசிரியரின் கற்பனை மற்றும் கதை சொல்லும் திறன் , தமது சுறு சுறுப்பான எழுத்துப் போக்கில் ஏற்படுத்தியிருக்கிற சாகச நிகழ்முகள், மேல்நாட்டு எழுத்தாளர் ஹென்றி ஷெரியரின் பாப்பிலோன் என்ற உண்மைக் கதை.யில் வருகின்ற நிகழ்வுகளை ஒத்திருக்கின்றன.
மிகுந்த பொறுமையும் விடா முயற்சியும் இருந்தாலொழிய ஒரு மாபெரும் சாதனைக் கதையை எழுத முடியாத என்பதை உணர முடிகிறது.
இதன் பிரம்மாண்டக் கதையரங்கம் பிரமிக்க வைக்கிறது.
ஏராளமான பொது அறிவு அறிவியல் கருத்துக்களும், உலகச் செய்திகளும் அந்த அந்த நாட்டு அமைப்புப் பெயர்களைச் சரியான வகையில் சேர்க்க மேற்கொண்ட கடும் உழைப்பை உணர முடிகிறது.
இதில் வரும் பெண்களின் திருமணத்தில் யார் யாருக்கு ஜோடி சேர்கிறார்கள் என்பதைத் துளி கூட யாரும் ஊகிக்க முடியாமல் பிரமிப்பாக உள்ளது.
படைத்த பிரம்மனுக்கும் கூடத் தெரியாது எனும் படியாக அமைத்துள்ளது மிகவும் பாராட்டுக்கும் உரியது ஆகும்.
ஓ ஹென்றி கதைகளில் வருவது போல யாரும் எதிர்பாராத பிரமாண்டமான முடிவுகளை உள்ளடக்கியதாக இந்த நாவலின் பல பகுதிகள் வருகின்றன.
ஆளுமை வளர்ச்சிக்கான உளவியல் கருத்துக்களைப் புனைந்திட்ட ஆப்ரஹாம் மாஸ்லோவிழன் சாராம்சத்தைப் போல அறிய பல கருத்துக்களை நாம் காண முடிகிறது.
உளவியல் அறிஞர் சிக்மண்ட் ஃப்ராய்டின் உள்ளப் பகுப்பாய்வுக்கும் இதில் இடம் உண்டு.
இதில் கதை சொல்லும் யுக்திகள் வியப்பூட்டுவதாக உள்ளன. ஒரு பெருங்கதையின் ஊடே பல சிறிய கதைகள் புகுத்தியுள்ளது கோர்வையாக உள்ளது.
மிகவும் பிற்படுத்தப் பட்ட குடியில் பிறந்த ஒரு பெண் எந்த அடிப்படை வசதிகளும்மே இல்லாத தான் பிறந்த கிராமத்தில் நூலகம், ஊனமுற்றோர் ஆதரவற்றோர் காப்பகம், யோகா நல மையம், சர்வதேச விஞ்ஞான பல்கலைக கழகம், இலவச மருத்துவமனை, அனாதைக் குழந்தையர் காப்பகம், என நிறுவி உலகத் தலைவர்களை எல்லாம் வரவழைத்த சாதனை முயற்சிகள் தனிச் சிறப்புக்கு உரியவை. இந்த மீனாவை விடவா வாழ்க்கைத் தடைகள், சோதனைகள், வேதனைகள்? வாழ்வில் இவரை விடக் கஷ்டப் படப் போகிறவரே இல்லை எனச் சுட்டிக் காட்டுகிறார்.
பார்வையில்லாத நிலையில் எந்த வித ஆதரவும் இல்லாத கதைத் தலைவி மீனாவே இந்த அளவுக்கு உயரும் போது
நாம் ஏன் உயரக் கூடாது.
நம் வீட்டை ஏன் உயர்த்தக் கூடாது.
நம் நாட்டை ஏன் உயர்த்தக் கூடாது.
இந்த நூலின் மூலம் உலகில் சில கோடிப் பேர்களாவது உயருவார்கள் என்ற தன்னம்பிக்கை கோண்ட இந்நூலாசிரியரது எதிர் காலச் சமுதாய வளர்ச்சிக் கனவுகள் நம் கண் முன் விரிகிறது.
இந்நூலைப் படிப்போர் மனங்களில் தன்னம்பிக்கை முற்போக்குச் சிந்தனை விதைகள் விதைக்கப்பட்டு விருட்சங்களாக வளரும் என்பதில் ஐயம் இல்லை.
கண்ணில் ஓற் காவியத்தைக் காலமும் ஞாலமும் போற்றும் என்பது திண்ணம்.
இதைப் படிக்கும் நாம் ஒவ்வொருவரையுமே உயர்த்தி வெற்றி மேல் வெற்றி பெறத் தூண்டும் சிந்தனைச் செறிவு மிக்க நாவல்.
படிக்கும் போது உலகையே சுற்றி வந்த உற்சாக மன நிறைவே ஏற்படுகின்றது.
இறுதியாக ஆசிரியரின் வரிகளிலேயே,
நம்மால் முடியும் என்பது மூலதனம்
முடியாது என்பது மூடத் தனம்
நம்பிக்கையோடு செயல் படுவோம்
நலம் பெறுவோம்
வளம் பெறுவோம்
என்ற நம்பிக்கையோடு முடித்திருக்கிறார்.
இக்காவியத்தைப் படித்த பின் உலகப் பலகணியில் தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் உலகளாவிய அன்பும், மதிப்பும், கௌரவமும் கிடைத்திருப்பதைக் கண் கூடாகப் பார்க்கிறோம்.
ஓங்குக மானுடம்! வெல்க மானுடம்!
வளர்க மானுடம்! வாழ்க மானுடம்!